லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை: சந்தேகநபர் கைது

லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஜெர்மனியில் கைது

by Bella Dalima 17-01-2019 | 10:01 PM
Colombo (News 1st) 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை தாம் கைது செய்துள்ளதாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவநீதன் எனும் 39 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலைக்கு காரணமாகவிருந்த குழுவில் இவர் அங்கம் வகித்ததாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கொலை முயற்சியுடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிப்பதாக ஜெர்மன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டு தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டமை, கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த சந்தேகநபர் எவ்வளவு காலம் ஜெர்மனியில் தங்கியுள்ளார் என்பது தௌிவாகத் தெரியவில்லை.