by Staff Writer 08-01-2019 | 9:41 PM
Colombo (News 1st) தனியார் விமானமொன்று திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு சென்று அங்கிருந்து வெளியேறியமை தொடர்பிலான தகவல்களை நியூஸ்ஃபெஸ்ட் வெளிக்கொணர்ந்தது.
இந்த விடயம் தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
திருகோணமலை - சீனன்குடா விமானப்படைத் தளத்திற்கு பொம்பாடியர் ரக தனியார் விமானத்தில் சிங்கப்பூர், சீனா மற்றும் ஹொங்கொங் நாடுகளின் பிரஜைகள் என கூறப்படும் சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) வருகை தந்தனர்.
இந்தக் குழுவினரை அழைத்து வரும் நடவடிக்கையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் அவரின் மகனும் ஈடுபட்டனர்.
உரிய நடைமுறைகளுக்கு முரணாக, அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.
சீனன்குடாவிற்கு சென்ற இந்த விமானம் சர்வதேச விமானப் பயணத்தின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றி வெளியேறியதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பயணத்திற்கு முன்னர் விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ரொஹான் மனுகுலசூரியவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுகுலசூரியவின் தெளிவுபடுத்தலுக்கு நியூஸ்ஃபெஸ்ட் மதிப்பளிக்கிறது.
எனினும், வெளியிட்ட செய்தி தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் முன்நிற்பதுடன், நாட்டின் சட்டத்தை எவ்வாறு மீற முடியும் எனவும் கேள்வி எழுப்புகிறது.
இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 34 ஆம் சரத்திற்கமைய, அங்கீகரிக்கப்படும் நிலையமல்லாத இடத்திலிருந்து எவரும் நாட்டிலிருந்து வெளியேற முடியாது.
நாட்டிற்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறலுக்கான நிலையத்தை அங்கீகரிக்க விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும்.
இலங்கையின் சட்டத்திற்கமைய சீனன்குடா அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையம் அல்ல.
இந்தப் பயணத்திற்கு முன்னர் இந்த விமான நிலையத்தை அங்கீகரிப்பதாயின், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா?
இந்த விமானத்திற்குள் சட்டவிரோதமான ஏதேனுமொன்று அல்லது சட்டத்திற்குப் புறம்பான எவரேனும் இருந்தமையினாலா இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது?
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனன்குடா விமான நிலையத்திற்கு சென்ற அனைவரும் மீண்டும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனரா?
சுங்க மற்றும் குடிவரவு குடியகல்வு அனுமதியை உரிய முறையில் அவர்கள் பெற்றிருந்தார்களா?
இந்த விமானம், அங்கீகரிக்கப்படாத விமான நிலையத்திலிருந்து, நாட்டின் விமான எல்லையிலிருந்து வெளியேறியமை தொடர்பில் விமானப் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படாமைக்கான காரணம் என்ன?
நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் அபிமானத்திற்கு அச்சுறுத்தலான இந்த நடவடிக்கைக்கு இடமளித்தது யார்?
இதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படாமைக்குக் காரணம் என்ன?