எல்லை வரைபட தயாரிப்பில் இலங்கை - இந்தியா கூட்டு

இலங்கையின் கடல் எல்லை வரைபட தயாரிப்பில் இலங்கை - இந்தியா கூட்டு

by Fazlullah Mubarak 06-01-2019 | 8:10 PM

இலங்கையின் கடல் எல்லை வரைபடத்தைத் தயாரிக்கும் கூட்டு நடவடிக்கையில், இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடல் எல்லை வரைபடத்தைத் தயாரிக்கும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக கடந்த 20ஆம் திகதி, இந்திய கடற்படைக்குச் சொந்தமான யமுனா கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்பில் அளவீட்டு நடவடிக்கையில் 15 நாட்களாக இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் இந்தக் கப்பல் நேற்று முன்தினம் காலியை சென்றடைந்ததாக கடற்படை தெரிவித்தது. இந்திய கடற்படையின் இந்தக் கப்பலில், ஆழமான கடற்பரப்புக்களில் வரைபடத் தயாரிப்பை முன்னெடுக்கும் தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. குறித்த இந்தியக் கப்பல் நாளை முதல் இரண்டு வார காலப்பகுதியின் தெற்குக் கடற்பரப்பில் வரைபடத் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுர சூரியபண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, கடற்படையின் குழுவொன்றில் இதில் இணையவுள்ளதுடன், அடுத்த மாதத்தில் இந்தக் கப்பல் நாட்டிலிருந்து வௌியேறவுள்ளது.