by Staff Writer 03-01-2019 | 10:34 PM
Colombo (News 1st) கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேடு தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வொன்றினை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
மீதொட்டமுல்லை சம்பவம் போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இது தொடர்பில் துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொஹாகொட கழிவு முகாமைத்துவத்தின் நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல் தொடர்பில், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி நகரசபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் குப்பைகளை வௌியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டினால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
குப்பை மீள்சுழற்சி முறையொன்றினூடாக குப்பைகளை வௌியேற்றுவதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறு நகரசபை மற்றும் மாகாணசபைகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், இதற்கான உதவிகளை வழங்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.