by Bella Dalima 08-12-2018 | 5:09 PM
ஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பஸ் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் நகருக்கு இன்று பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. பிளேரா மலைப்பகுதியில் சென்றபோது, அந்த பஸ் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி, ஆழமான பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் கடுமையாக சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் 11 பேர் பலியான நிலையில், காயமடைந்த 17 பேரில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.