by Staff Writer 06-12-2018 | 8:55 PM
Colombo (News 1st) வலப்பனை கல்வி வலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சிலர் இன்று குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
ராகலை - புரூக் சைட் வித்தியாலயம், கினிகத்தேனை கதுருகல விக்னேஸ்வரா வித்தியாலயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள முறைகேடாக பணம் வசூலிக்க முற்பட்டமை மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதை மறுதலித்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் புரூக் சைட் தோட்டத்திற்கு இன்று சென்றிருந்தனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததால் சில பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவர்களுக்காக தாம் போராடுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.