மக்கள் சேவையை இடையூறின்றித் தொடர்க: அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 04-12-2018 | 7:18 PM
Colombo (News 1st) மக்கள் சேவையை எவ்வித இடையூறுகளுமின்றி தொடருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு தற்காலிகமாகத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் பின்னர், அரச நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனை மற்றும் உத்தரவுகளை வழங்குவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களுக்காக தமது பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து அரச ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் ஜனாதிபதி தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.