Colombo (News 1st) விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும்.
வடக்கு, கிழக்கிலும் இந்தியாவிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இன்று ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மாணவர்களும், விரிவுரையாளர்களும் இன்று பகல் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 06.05-க்கு மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறையிலும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 28ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.
முல்லைத்தீவு - ஐயன்குளம் பகுதியில் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த 6 மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் இன்று நினைவுகூரப்பட்டனர்.
முல்லைத்தீவு கடற்கரை, முள்ளியவளை, அளம்பில் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
வவுனியா - நகரசபை மண்டபத்தில் பிரஜைகள் குழுவால் மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வவுனியா - ஈச்சங்குளம் பகுதியிலும் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம், முழங்காவில், தேராவில் பகுதிகளிலும் மன்னார் - ஆட்காட்டிவௌி துயிலும் இல்லத்திலும் மட்டக்களப்பு - பிரான் தரவை துயிலும் இல்லத்திலும் கொக்கட்டிச்சோலை - மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை, வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்கள் மாவீரர் தினத்தை அனுஸ்டித்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டதுடன், இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு - வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திலும் தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் தினம் அஸ்டிக்கப்பட்டது.
அம்பாறை - திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருகோணமலை - சம்பூர், ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் ஈகைச்சுடரேற்றி இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
