by Staff Writer 24-11-2018 | 7:55 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சபாநாயகர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கலேவெல நகரில் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கலேவெல பிரதேச சபைக்கு அருகில் ஆரம்பமான பேரணி, கலேவெல நகர் மத்தியில் சென்றடைந்ததும் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப்ரமித பண்டார தென்னகோன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடியாக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியும் ஹம்பாந்தோட்டை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சபாநாயகர், தமது பதவியிலிருந்து உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஹதரலியத்த நகரில், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்றது.
இதேவேளை, ஹாரிஸ்பத்து பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுணுகம தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
சபாநாயகருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தெஹிவளை நகர சபை முன்பாக இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.