பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் விவாதம்

by Staff Writer 20-11-2018 | 10:02 PM
Colombo (News 1st) பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) பாராளுமன்ற செயற்பாடுகளை சிக்கலின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த குழுவை நியமித்தல் முக்கிய காரணியாக மாறியுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்ய, கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துடன், பாராளுமன்றத்தின் அனைத்து செயற்குழுக்களும் இரத்தாகின. பாராளுமன்ற செயற்பாடுகள், நிலையியல் கட்டளைகள், சலுகைகள், அரசியலமைப்பு, அரச கணக்குகள் மற்றும் பொது முயற்சியாண்மைக்கான செயற்குழு உள்ளிட்ட துறைகளுக்கான கண்காணிப்பு, ஆலோசனை செயற்குழுக்களின் அமைப்பு, உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவற்றின் செயற்பாடுகள் மற்றும் கோரம் ஆகியவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும். இவை தொடர்பான தமது கருத்தை கூடிய விரைவில் பாராளுமன்றத்திற்கு அறிவித்தல் மற்றும் செயற்குழுக்களில் சேவையாற்றுவதற்கு உறுப்பினர்களைப் பெயரிடுவது ஆகிய விடயங்களை இந்த தெரிவுக்குழுவே முன்னெடுக்கும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக சபாநாயகரே செயற்படுவார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அடங்கலாக 12 பேரை தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். தாம் ஆளுங்கட்சி என்பதால், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தற்போது கூறுகின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமைக்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு அறிவிப்பதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். சபாநாயகருடன் நாளை (21) கலந்துரையாடி தமது உறுப்பினர்களை பெயரிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு யார் என்பதை குறித்த கலந்துரையாடலின் போது சபாநாயகரூடாக அறிந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்காக பெயரிடப்பட்டுள்ளனர்.