Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க உள்ளிட்ட சிலர் மகாநாயக்க தேரர்களை இன்று சந்தித்தனர்.
மல்வத்து மகா விஹாரைக்கு இன்று காலை சென்ற உறுப்பினர்கள், தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை தெளிவூட்டினா்.
பின்னர் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரை, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்தனர்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க பின்வருமாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாம் அச்சமடையவில்லை. எனினும், பொதுத்தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றாக நடத்துமாறே நாம் கோருகின்றோம். அதில் தவறேதும் இல்லை. காபந்து அரசாங்கமொன்றை நியமித்து, சுயாதீன பிரதமர் ஒருவரை நியமித்து தேர்தல்களுக்கு செல்ல முடியும். தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலுக்கு செல்ல முடியாது.
இதனையடுத்து, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும் சந்தித்து, ஐக்கிய தேசியக் கட்சியினர் விடயங்களைத் தெளிவூட்டினர்.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அவசியத்தை தேரருக்கு நவீன் திசாநாயக்க பின்வருமாறு தௌிவுபடுத்தினார்.
பொதுத்தேர்தலொன்றை நடத்த முடியாது. எமது கருத்துக்களை ஏற்று, சட்டத்திற்கு அமைய உயர்நீதிமன்றம் பொதுத்தேர்தலை தற்போது இடைநிறுத்தியுள்ளது. ஜனாதிபதிக்கு அவசியம் எனின், இந்த பிரச்சினை தொடர்பில் பொதுமக்களின் கருத்தை அறிய ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல முடியும். சிறந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எமக்குள்ளனர். அது தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை. இளைஞராக இருக்க முடியும். இளைஞர் அல்லாது ஒருவராகவும் இருக்கலாம். நடுத்தர வயதான ஒருவராகவும் இருக்கலாம்.