சோமாலிய உணவகக் குண்டுவெடிப்பில் 20 பேர் பலி

சோமாலிய உணவகக் குண்டுவெடிப்பில் 20 பேர் பலி: அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது

by Bella Dalima 10-11-2018 | 4:40 PM
சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. நேற்று (09) அந்த உணவகத்தின் அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறியதால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் என பலர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் உணவக உரிமையாளரும் ஒருவர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவகத்தினுள் இருந்த அரச அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.