இலாபம் தேடும் மலிக் சமரவிக்ரம

கொஹாகொட கழிவகற்றும் திட்டத்திலும் இலாபம் தேடும் மலிக் சமரவிக்ரம?

by Staff Writer 25-10-2018 | 9:21 PM
Colombo (News 1st) கண்டி மாவட்டத்தின் கொஹாகொட குப்பை மேட்டினால் தற்போது சுற்றாடலுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் மகாவலி கங்கையின் ஒரு பகுதியில் குவிந்துள்ளதுடன், அந்த குப்பை மேடு சரிந்து வீழும் அபாயம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இயற்கை பசளை குளிரூட்டி மற்றும் மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி அவ்வேளையில் விவசாய அமைச்சராக இருந்த துமிந்த திசாநாயக்க, அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். பின்னர் மலிக் சமரவிக்ரம உறுப்புரிமை வகிக்கும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உப குழுவிற்கு இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதன் முக்கிய பிரிவினை அவர் தன் கீழ் கொண்டுவந்தார். உப குழுவின் தீர்மானத்தின் படி, திட்டத்திற்குத் தகுதியான முதலீட்டாளரை தெரிவு செய்யும் பொறுப்பு மலிக் சமரவிக்ரமவிற்கு வழங்கப்பட்டது. சுவிஸ் செலன்ச் முறைக்கு ஏற்ப கொஹாகொட திட்டத்திற்காக ஜெர்மனியின் சோல் வென்ச்சர், இலங்கையின் ரீசைக்கிள் இன்ஜினியரிங் மற்றும் தேசிய ஊக்குவிப்பு நிறுவனமான ACNDRF ஆகிய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன. ஒரு நிறுவனம் திட்டம் தொடர்பிலான பிரேரணையை முன்வைத்து அதன் பின்னர் அதனைவிட இலாபகரமான முறையில் திட்டத்தை முன்னெடுக்க முடியுமான நிறுவனங்கள் மூலம் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளவதே சுவிஸ் செலன்ச் முறை மூலம் இடம்பெறுகின்றது. அதற்காக ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே வழங்கப்படுகிறது. கொஹாகொட கழிவகற்றும் திட்டத்துடன் தொடர்பிலான பிரேரணைக்கு ஆட்சேபனை விடுக்கும் வகையில், ஒரே ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன் பிணை காப்புறுதி இல்லாமையினால் அது நிராகரிக்கப்பட்டது. அதன்படி, மலிக் சமரவிக்ரமவின் அமைச்சு தெரிவு செய்த ஒன்றிணைந்த நிறுவனத்திற்கு திட்டத்தினை முன்னெடுப்பதற்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. சுவிஸ் செலன்ச் முறைமையின் கீழ் இந்த திட்டத்தினை முன் எடுப்பதனால் தேசிய கொள்கை வகுப்பு முறையின் கீழ் செயற்பாட்டு பிணை அவசியமில்லை எனவும் அமைச்சரவை தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில், அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்துள்ளார். இந்த திட்டம் கண்டி மாவட்டத்தின் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருந்தது. கண்டி மாநகர சபை, மத்திய மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கு அறிவித்து இணக்கப்பாடு பெறாமை மற்றும் செயற்பாட்டு பிணை அவசியமில்லை என முன்வைக்கப்பட்ட காரணங்கள் காரணமாக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தார். ஜனாதிபதியின் எதிர்ப்பினையும் கருத்திற்கொள்ளாமல் அமைச்சரவையில் இதற்கான அனுமதி பெறப்பட்டது. இதற்கு முன்னர் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்றை இரத்து செய்து இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 ஆம் திகதி இந்தத் திட்டம் தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இதனை ஆரம்பிப்பதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர், இலங்கை உர நிறுவனம் என்ற பெயரில் வெளிநாட்டு வங்கி ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்தது. அத்துடன், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தை 36 ரூபாய் 20 சதத்திற்கு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வாறான மின் உற்பத்தி நிலையத்தினால் ஒரு அலகு மின்சாரத்தினை 23 ரூபா 10 சதத்திற்கு கொள்வனவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. விலை மாற்றத்தினை திறைசேரி அல்லது ஒரு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இலங்கை மின்சார சபையின் நிலைப்பாடாக அமைந்துள்ளது. ஏற்கனவே நிறுவனம் ஒன்றை தெரிவு செய்து கொண்டு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பேசியதன் பின்னர் மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு உபாயங்களை முன்னெடுக்கும் இந்த விளையாட்டினை நாம் ஓரிரு தடவைகள் அல்ல பல தடவைகள் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் செயற்பாடுகள் தொடர்பில் 2015ஆம் ஆண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நியூஸ்ஃபெஸ்ட் வௌிப்படுத்தி வருகின்றது. கட்சியின் தவிசாளராக முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நடைபெற்ற காலை நேர கலந்துரையாடலில் மலிக் சமரவிக்ரம கலந்துகொண்டார். இறுதியில் இந்த கொடுக்கல் வாங்கலில் பாரிய மோசடி இடம்பெற்றது. மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் வழங்கிய முறை தொடர்பிலும் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது. ஒப்பந்த முறைக்கு மாறாக நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு மலிக் சமரவிக்ரமவே முன்நின்றுள்ளார். மொன்டி காசிம் என்ற நபர் ஊடாக இந்த கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேற்சொன்ன விடயங்கள் இடம்பெறவில்லையென்றால், அமைச்சர் மலிக் சமரவிக்ரம வௌிப்படையாக அது தொடர்பில் பதில் வழங்க வேண்டும்.