by Staff Writer 23-10-2018 | 9:05 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதித் தலைவரான பியல் நந்தன திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மூன்று கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதித் தலைவரான பியல் நந்தன திசாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
தென் ஆபிரிக்க கிரிக்கெட் விஜயத்துடன் தொடர்புடைய தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டிய 3 கோடி ரூபாவை அண்மித்த தொகையை பிரத்தியேக வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டமைக்காக பியல் நந்தன திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்து விஜயத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டிய 11 மில்லியன் அமெரிக்க டொலர்களில் முதல் கொடுப்பனவான 5 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கடந்த தென் ஆபிரிக்க விஜயத்தில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைக்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டிய இறுதிக்கொடுப்பனவு அமெரிக்காவிலுள்ள தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.