by Staff Writer 14-10-2018 | 6:30 AM
Colombo (News 1st) ரயிலில் காட்டுயானைகள் மோதுவதைத் தடுப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய, காட்டுயானைகள் நடமாடும் பிரதேசங்களை பார்வையிட்டு திட்டமொன்றை தயாரிப்பதற்காக, வடக்கு கிழக்கு ரயில் மார்க்கங்களுக்கு குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
14 பேர் கொண்ட குழுவொன்று 4 நாட்களாக இந்தக் கள ஆய்வில் ஈடுபடுமென அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 11ம் திகதியிலிருந்து மஹவ சந்தியிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை ஆகிய ரயில் மார்க்கங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தக் குழு கடந்த 2 தினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் தொடர்பில் பெற்றுக்கொண்ட தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாக வைத்து காட்டு யானைகள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்க பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ரயில் சாரதிகளுக்கு பாதை தெளிவாக விளங்குவதற்கு இரு மருங்கிலும் 30 மீற்றர் அளவில் காடுகளை வெட்ட வெளியாக்குதல், வேகக்கட்டுப்பாட்டை முறையாக பேணுதல், ரயில் மார்க்கத்தின் இருமருங்கிலும் மலைப்பாங்கான பிரதேசங்கில் யானைகளுக்கு செல்வதற்கு ரயில் மார்க்கத்துக்கு மேலாக பாதை அமைத்தல், ரயில் பாலங்கள் மற்றும் மதகுகள் காணப்படும் பிரதேசங்களில் மின்வேலிகள் அமைத்து தடைகளை ஏற்படுத்தல் மற்றும் அனர்த்த சமிக்ஞைகளை நிறுவுதல் என்பன அவற்றில் காணப்படுகின்றன.
இந்த ஆய்வின் பின்னர் இதற்கென பிரதான திட்டம் தயாரித்தல் 5 நாட்களுக்குள் இடம்பெறும்.
அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் இந்த மாதம் நிறைவடைய முன்னர் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, காட்டு யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கு, இந்த விடயத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வர வேண்டும் என பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும நேற்று தெரிவித்தார்.