by Staff Writer 08-10-2018 | 6:41 PM
முறிகள் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை சந்தேகநபராக பெயரிடுவது சட்டரீதியானது அல்லவென கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (08) தீர்மானித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சம்பவம் தொடர்பில இலங்கை குற்றவியல் தண்டனை சட்டகோவைக்கு அமைய இதுவரை விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை என பிரதம நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக, ரவி கருணாநாயக்கவை சந்தேகநபராக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்டரீதியற்றது எனவும் பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ரவி கருணாநாயக்கவிற்கு சொந்தமானது என கூறப்படும் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் அறிக்கையைப் பெற்று, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான அனுமதி காணப்படுவதாகவும் பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 22 ஆம் திகதி நீதமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.