by Staff Writer 08-10-2018 | 6:51 PM
முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் குழாம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் முறைப்பாட்டாளர் தரப்பினால் பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ வாயு நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத், நீல் பண்டார ஹப்புஹின்ன, லசந்த பண்டார, பியதாஸ குடாபாலகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே மன்றில் ஆஜராகியிருந்ததுடன், பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜராகியிருந்தது.