தமிழ் அரசியல் கைதிகள் 13ஆவது நாளாக உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகள் 13ஆவது நாளாக உண்ணாவிரதம்: விடுதலை தொடர்பில் ஆராய்வு?

by Staff Writer 26-09-2018 | 5:32 PM
Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 13ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல்வாதிகள் சிலர் இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இன்று கைதிகளை சந்தித்தனர். இதேவேளை, அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயப்பட்டதாக அறிய முடிகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வெளியேறிய இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்காமல் சென்றனர்.