வாய்மூல சமர்ப்பணத்திற்காக விசாரணை ஒத்திவைப்பு

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு விசாரணை வாய்மூல சமர்ப்பணத்திற்காக ஒத்திவைப்பு

by Staff Writer 19-09-2018 | 4:11 PM
Colombo (News 1st)  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வாய்மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் M.Y.M. இஸர்தீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகளின் வாய்மூல சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார். இன்றைய தினம், வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் இன்னொரு முறை சாட்சியமளிக்க வேண்டுமென தெரிவித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். குறித்த கடிதம், ஆவணக்கோவை மற்றும் உப கோவையில் இணைக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி மற்றும் நீதிமன்ற பதிவாளரிடம் வினவப்பட்டுள்ளது. பிரதிவாதிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஆவணக்கோவை மற்றும் உப கோவையில் இணைக்க மறந்திருக்கலாமென பதிவாளர் தெரிவித்துள்ளார். இன்று அரச தரப்பு சட்டத்தரணி மாதவ தென்னக்கோனால் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005 ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.