முறிகள் மோசடி: மேலுமொரு சாட்சியம் கிடைத்துள்ளது

முறிகள் மோசடி: மேலுமொரு ஆதாரம் கிடைத்துள்ளது

by Staff Writer 13-09-2018 | 7:24 PM
Colombo (News 1st)  மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடைபெற்ற போது, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தினூடாக W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணம், அந்நிறுவனத்தினூடாக சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டதற்கான 102 வவுச்சர்களும், W.M. மென்டிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய அழிக்கப்பட்டமைக்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாக சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். W.M. மென்டிஸ் நிறுவனம் இரண்டாம் தரப்பினருக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வழங்கிய நிதிக்கான காசோலைகள் பல குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். W.M. மென்டிஸ் நிறுவனம் யாருக்கு இவ்வாறு பணத்தைப் பெற்றுக்கொடுத்தது என்பது தௌிவாகக் கண்டறியப்படவில்லை எனவும், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் யசந்த கோதாகொட நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்கு தேவையான தரவுகளை W.M. மென்டிஸ் நிறுவனத்தில் காணப்பட்ட கணினி தரவுகளை சோதனையிட்ட போது, அந்நிறுவனத்தின் தற்போதைய பதில் நிறைவேற்று அதிகாரியாக செயற்படும் சஜித் களுபத்திரன என்பவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு இடையூறு விளைவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.