வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இம் மாதம் முதல் நிவாரணம்

by Staff Writer 12-09-2018 | 6:53 AM
Colombo (News 1st) நிலவும் கடும் வரட்சி காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1,35,000 குடும்பங்களுக்கு இந்த மாதம் முதல் நிவாரணம் வழங்கவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இதற்காக 700 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிரண தெரிவித்துள்ளார். இந்தநிலையில், குறித்த நிவாரணத் திட்டத்தின் கீழ் குடும்பமொன்றிற்கு மாதாந்தம் 5,000 ரூபா வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சமிந்த பதிரண மேலும் குறிப்பிட்டார். வரட்சி காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் தொகை 8,90,000 ஆக அதிகரித்துள்ளது. 17 மாவட்டங்களின் 104 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம், புத்தளம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுள் அடங்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளே அதி பாதிப்பை சந்தித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, 72 நீர்நிலைகளில் நீரேந்துகையின் அளவு 35 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கமநல திணைக்களத்தினால் முகாமைத்துவம் செய்யப்படும் பெருமளவிலான நீர்த்தேக்கங்களில் போதியளவு நீரேந்துகை இன்றியுள்ளது.