மன்னார் மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்த மக்கள் சக்தி குழுவினர்
by Staff Writer 12-09-2018 | 9:57 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
மன்னார் பாலம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு சென்ற மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் அங்கு வழிப்பாடுகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் சக்தி குழுவின் ஒரு பிரிவினர் பானம்பிட்டி கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.
பாலம்பிட்டி பகுதி மக்கள் குடிநீர் இன்மையால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.
அத்துடன், இந்த கிராமத்தில் 6 பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் 6 சிறிய குளங்கள் உள்ள போதிலும் அந்தக் குளங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளமையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.
விவசாயத்தை நம்பி வாழும் இந்த மக்கள் தற்போது வாழ்வாதாரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கீரிசுட்டான் குளம் 30 வருடங்களாக புனரமைக்கப்படாமல் உள்ளதுடன், அந்தக் குளத்தை புனரமைத்துக் கொடுத்தால் தங்களின் விவசாயத்தை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்திற்கு சென்றுள்ள மற்றுமொரு மக்கள் சக்தி குழுவினர் வங்காலை பகுதிக்குச் சென்றனர்.
வங்காலை கிராமத்தில் 1500 மீனவக்குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகள் மூலம் தங்களின் கடல் எல்லையில் மீன் பிடிப்பதனால் தங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளதாக வங்காலை மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடந்து எருவிட்டான் பகுதிக்கு சென்ற மக்கள் சக்தி குழுவினருக்கு அந்த கிராமத்தில் குடி நீரின்மையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அங்குள்ள மக்களுக்கு நீரைப் பெற்றுக்கொள்வதற்கு குழாய் இணைப்புகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், அதிலிருந்து நீரைப் பெற்றுகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
ஒரு லிட்டர் நீரை 5 ரூபா செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் சக்தி குழாத்தினருக்கு எருவிட்டான் கிராம மக்கள் குறிப்பிட்டனர்.