பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணம் அதிகரிப்பு

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணம் அதிகரிப்பு

by Staff Writer 11-09-2018 | 3:39 PM
Colombo (News 1st) எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 5 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்தார். இதற்கு முன்னர் எரிபொருளின் விலை உயர்வடைந்த போதிலும், பாடசாலை சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளதால், இம்முறை பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, எரிபொருள் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணங்களை கட்டாயமாக அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டிக் கட்டணத்தையும் அதிகரிப்பது தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதாக முச்சக்கர வண்டி சேவையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்தது. இதன் பிரகாரம், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 161 ரூபாவாகவும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 149 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 133 ரூபாவாகும். ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒட்டோ டீசலின் புதிய விலை 123 ரூபாவென பெட்ரோலிய வளத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கை IOC நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம், லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 123 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், யூரோ F ரக சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 164 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.