பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்க 300 பௌசர்கள்

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்க 300 பௌசர்கள்

by Staff Writer 09-09-2018 | 12:01 PM
Colombo (News 1st) வரட்சியுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்குவதற்காக, 300 பௌசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வரட்சியுடனான வானிலையால், வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். நீரின்றி தவிக்கும் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக பௌசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், வனப்பகுதிகளிலும் வரட்சி நிலவுவதால், வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதைத் தவிர்க்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம், வனப்பகுதிகளுக்குத் தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.