by Bella Dalima 06-09-2018 | 4:46 PM
Colombo (News 1st) இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யும் விடயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்க முடியும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்ததாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் , 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பிய போதிலும் சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்திற்குப் பின்னர் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மேலும், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர், ராஜிவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என கூறி தமிழக அரசின் கோரிக்கையை குடிரயரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
இந்நிலையில், கருணை அடிப்படையில் எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
எனினும், 7 பேரை விடுவிக்க மறுத்த மத்திய அரசு, அதற்கான கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் எனவும் அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் எனவும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்ததாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.