அபிவிருத்தி எட்டாக்கனியாகவுள்ள கிராமங்கள்

மக்கள் சக்தி: அபிவிருத்தி எட்டாக்கனியாகவுள்ள முல்லைத்தீவு கிராமங்கள்

by Staff Writer 06-09-2018 | 8:29 PM
Colombo (News 1st)  மக்களால் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதநேயப் பணியான மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று மற்றும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆறு பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று மக்கள் சக்தி குழாத்தினர் சென்றிருந்தனர். 120 குடும்பங்களின் ஜீவபூமியே - குமிழமுனை ஆறுகமுத்தான்குளம் கிராமம். மீள்குடியேறிய இந்த கிராம மக்களின் வாழ்வில் அபிவிருத்தி என்பது எட்டாக்கனியே. விவசாயத்திற்கு சொந்த நிலமற்ற நிலையிலும், பயிர்செய்கையில் ஈடுபடுகின்ற இவர்களின் ஜீவனோபாயம் குரங்குகளின் அட்டகாசத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதியின்மை, சட்டவிரோத மதுசார விற்பனை உள்ளிட்ட பல்வேறு சவால்களை இவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, 100 குடும்பங்களின் வாழ்விடமான அளம்பில் - தங்கபுரமும் அபிவிருத்தியின் ரேகை எதுவுமின்றியே காட்சியளிக்கிறது. வறட்சியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த கிராம மக்களின் நீண்ட நெடிய கனவே சுத்தமான குடிநீர் தான். உலகெங்கும் செறிந்து வாழ்கின்ற மக்களால் இலகுவில் மறந்து, ஜீரணித்துவிட முடியாத முள்ளிவாய்க்கால் பகுதியில் துன்பியல் அனுபவங்களின் வடுக்களைக் காண முடிந்தது. நுண்கடனால் கட்டுண்டு வாழும் குடும்பங்கள் இங்கு ஏராளம். துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குத்துவெட்டுவான் கிராமத்திற்கு சென்றிருந்த நியூஸ்ஃபெஸ்ட் குழுவினருக்கு அங்கு இடம்பெற்றுவரும் ஓயாத கிரவல் மண் அகழ்வுப் பிரச்சினை ஆச்சரியத்தைக் கொடுத்தது. யானைகளின் அச்சுறுத்தலினால் அஞ்சி வாழும் இந்த மக்கள் விவசாயத்திற்கான நீரின்றியும் குடிநீரின்றியும் எதிர்நோக்கிவரும் அவலங்கள் அதிகம். 350 குடும்பங்கள் வாழும் மீள்குடியேற்றப்பட்ட கிராமமே ஐயங்கன் குளம். இங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கும் முன்பள்ளிக்கும், எதுவித வசதிகளுமின்றிக் காணப்படும் வைத்தியசாலைக்கும் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் விஜயம் செய்தனர்.