by Staff Writer 06-09-2018 | 7:28 PM
Colombo (News 1st) வட மாகாண அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனினால் தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்தும் விசாரணை செய்வதை தடுக்கும் வகையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ப. டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி சி.வி. விக்னேஷ்வரனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு எதிர்வரும் 20 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
புவநெக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று (05) இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால் கடந்த ஜூன் 29 ஆம் திகதி விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடை நிறுத்துமாறும், அது தொடர்பில் அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் வட மாகாண முதலமைச்சரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.