சட்ட உள்ளடக்கங்கள் போதுமானதாக இல்லை

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சட்ட உள்ளடக்கங்கள் போதுமானதாக இல்லை: காணாமற்போனோர் அலுவலகம் அறிக்கை

by Bella Dalima 06-09-2018 | 3:55 PM
Colombo (News 1st)  காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நாட்டில் காணப்படும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் போதுமானதாக இல்லை என காணாமற்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் அலுவலகம் தமது இடைக்கால அறிக்கையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. காணாமற்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (05) கையளிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. காணாமற்போனார் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள மேலும் சில பரிந்துரைகள்
  • காணாமற்போனோரின் குடும்பங்களுக்காக அவசரமான மற்றும் அண்மித்த நிவாரணங்களாக இடைக்கால நிவாரணங்களை வழங்க வேண்டியது அத்தியாவசியமாகும் என இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் இராணுவ நடவடிக்கையின் போது காணாமற்போனோரின் உயிர்வாழும் உறவினர் ஒருவருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1000 ரூபா பணம் இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படுவதுடன், இறுதியாக இழப்பீடு வழங்கப்பட்டதன் பின்பு இது நிறுத்தப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காணாமற்போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக அவர்களின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியை பூர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சின் கீழ் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை உருவாக்கி மாதாந்தம் 2000 ரூபா நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • விசேட தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு ஒரு வீதத்தை ஒதுக்கி, காணாமற்போன, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட (அவசியமான தேர்ச்சியுடன் கூடிய) குடும்ப உறுப்பினர்களுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்புகளை ஒதுக்கல் வேண்டும் எனவும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
  • சட்டத்தின் ஆறாவது வாசகத்தை திருத்தி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக நியாயாதிக்க அதிகாரத்தை நீக்கி குற்றவியல் குற்றம் புரியப்பட்ட பிரதேசத்திற்குரிய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குதல் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • நீதிமன்ற மீளாய்வு இன்றி சந்தேகநபர்களையும் குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் நீண்டகாலமாக தடுத்து வைக்கக்கூடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை நீக்குதல் அல்லது சீர் செய்தல் வேண்டும் என காணாமற்போனார் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னமான அஹிம்சக்க ஆராமய என்ற ஞாபகார்த்த மண்டபத்தை மீள ஸ்தாபித்தல் மற்றும் அகழ்வு நடவடிக்கைகளின் பின்னர் கூட்டு புதைகுழிகள் ஞாபகார்த்த அமைவிடங்களாகப் பேணி பாதுகாக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காணாமற்போனவர்கள் பற்றிய உண்மையான தகவல்களை அரசினால் வழங்க முடியாமையினால், அரசு மீது பாரிய சந்தேகம் உருவாகியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமற்போனோர் பற்றிய சம்பவத்திற்கு முன்னுரை வழங்கப்பட வேண்டும் என காணாமற்போனவர்களின் உறவினர்களும், சிவில் சமூகக் குழுக்களும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்த இராணுவ உத்தியோகத்தர்களுக்கு தொந்தரவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளதாக இதில் மேலும் கூறப்பட்டுள்ளது.