மக்கள் சக்தி: குப்பை கூளங்கள் சூழ்ந்த பாடசாலை

மக்கள் சக்தி: குப்பை கூளங்கள் சூழ்ந்த பாடசாலை, குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள்

by Staff Writer 30-08-2018 | 8:12 PM
Colombo (News 1st)  பாடசாலைச்சூழல் ரம்யமானதாக அமைய வேண்டியது அவசியமானதாகும். குப்பை கூளங்கள் சூழ்ந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்களை மக்கள் சக்தி குழுவினர் இன்று சந்தித்தனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, குறித்த பாடசாலைக்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர். காத்தான்குடி களப்பிற்கு அருகிலுள்ள ஜாபியுல்லா சிரின் வித்தியாலயத்தின் சுற்றுப்புறமே குப்பை கூளங்களுடன் காட்சியளிக்கிறது. களப்பில் கழிவுகள் கொட்டப்படுவதன் பிரதிபலனாக மாணவர்களுக்கு அசுத்தமான சுற்றுச்சூழல் அமைந்துள்ளது.
  • மட்டக்களப்பு - முருக்கன்தீவு மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
  • முருக்கன்தீவிற்கும் - கிண்ணையடிக்கும் இடையில் பாலமொன்றை நிர்மாணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தினாலும் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • குடிநீரைப் பெறுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பனிச்சையடி - முன்மாரி கிராம மக்கள் தெரிவித்தனர்.
  • மாவடியூற்று கிராமத்தில் முன்பள்ளியொன்று இன்மையால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோர் சுட்டிக்காட்டினர்.
  • ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற கிரிமெட்டியாவ ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.
  • வெவேகெதர கிராமத்திலுள்ள குளம் தூர்வாரப்படவில்லை என்பதுடன், இங்குள்ள மக்கள் போக்குவரத்து பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பமுணாகொடுவ - திம்மானகம மக்களுக்கு நீர் விநியோகத் திட்டமொன்று வழங்கப்படும் என 1980ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
  • துபல்லே பகுதி மக்களும் குடிநீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். விவசாய செய்கைகளை யானைகள் துவம்சம் செய்வதால் இவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
  • செல்லக்கதிர்காமத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், ஈடு செய்ய முடியாத இழப்பை யானைத் தொல்லையால் நாளாந்தம் எதிர்நோக்குகின்றனர். இங்கு விவசாயத்திற்கு தேவையான நீர் இன்மையால் சுமார் 400 ஏக்கர் நெற்செய்கை நிலப்பரப்பு கைவிடப்பட்டுள்ளது.