முஹாந்திரம்பிட்டி களப்பை சுத்தப்படுத்திய  V'Force

நீர்கொழும்பு முஹாந்திரம்பிட்டி களப்பை சுத்தப்படுத்திய மக்கள் சக்தி V'Force - தன்னார்வத் தொண்டர்கள்

by Bella Dalima 25-08-2018 | 8:45 PM
Colombo (News 1st)   சிகிரியாவில் ஆரம்பமான மக்கள் சக்தி V'Force - தன்னார்வத் தொண்டர்களின் இரண்டாம் கட்ட செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. நீர்கொழும்பு முஹாந்திரம்பிட்டி களப்பை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பெருந்திரளான தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இலங்கை கடற்படையினரும் நீர்கொழும்பு நகர சபை ஊழியர்களும் இந்த தேசிய வேலைத்திட்டத்தில் இன்று இணைந்துகொண்டனர். ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களும் , Asia Paad அமைப்பும் V'Force படையணியில் இணைந்துகொண்டனர். களப்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டதுடன், இறங்குதுறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. சுத்தப்படுத்தும் நடவடிக்கையின் பின்னர் தன்னார்வப் படையணியின் உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. பதக்கங்களைப் பெற்றவர்கள் தமது தலைமைத்துவத்தின் கீழ் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது விசேட சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். மக்கள் சக்தி V'Force குழுவினர் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இரத்தினபுரிக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.