by Staff Writer 25-08-2018 | 8:56 PM
Colombo (News 1st) ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் ஜனக பிரசாத் விமலசிறி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதேவேளை, ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் அருண தர்ஷன மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெறும் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் 7 ஆம் நாளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றன.
இன்று காலை நடைபெற்ற ஆடவருக்கான முதல் சுற்று கரப்பந்தாட்டப்போட்டியில் இலங்கை மற்றும் சீன அணிகள் மோதின.
போட்டியின் முதல் சுற்று 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் சீனா வசமானது.
இரண்டாம் சுற்றில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள் அந்த சுற்றை 25- 20 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர்.
மூன்றாம் மற்றும் நான்காம் சுற்றுக்களை தனதாக்கிய சீன வீரர்கள் இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பை பெற்றார்கள்.
எவ்வாறாயினும், சர்வதேச கரப்பந்தாட்ட நிரல்படுத்தலில் 20 ஆம் இடத்தில் நீடிக்கும் சீன அணியை 78 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள இலங்கை அணி ஒரு சுற்றில் வெற்றி கொண்டமை சிறப்பம்சமாகும்.
ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
இன்று காலை ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டதுடன், அதில் பங்கேற்ற அருண தர்ஷன மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அவர்கள் இருவரும் பங்கேற்கும் அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.