கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளப் பிரேரணை தாமதம்

கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளப் பிரேரணையை சமர்ப்பிப்பதில் தாமதம்

by Bella Dalima 24-08-2018 | 4:56 PM
Colombo (News 1st)  கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்திற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதில் தாமதம் நிலவுவதாக கணக்காய்வு தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் சர்வதேச அமைப்பிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கணக்காய்வு தொழிற்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி K.N.M. குமாரசிங்க தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் கணக்காய்வாளர் நாயகத்திற்கான சம்பளத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்காமையானது பாரிய அநீதி எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துடன் செயற்படும் சிலரால் இந்த விடயம் மேற்கொள்ளப்படுவதாகவும் சட்டத்தரணி K.N.M. குமாரசிங்க சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்கவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, தமக்கான சம்பளத்தை பாராளுமன்றம் இதுவரையில் அனுமதிக்காத நிலையிலும், நாட்டு மக்களுக்கான தமது சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அவர் கூறினார். இதேவேளை, கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை நேற்று (23) அரசாங்கம் மீளப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.