ஊடக நிறுவனத் தலைவர்களின் தொலைபேசிகளுக்கு இடையூறு

ஊடக நிறுவனத் தலைவர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு இடையூறு

by Bella Dalima 23-08-2018 | 8:49 PM
Colombo (News 1st)  நாட்டின் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பலரின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு இன்று காலையிலிருந்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தகவல்கள் வௌிவந்துள்ளன. அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஆரம்பித்துள்ளதாக டெய்லி மிரர் கடந்த 8 ஆம் திகதி செய்தி வௌியிட்டிருந்தது. இதன் விசேட பிரிவு நுகேகொடை பகுதியில் அமைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இது தொடர்பில் தகவல்களை வௌியிட்டிருந்தார். நாட்டின் பாதுகாப்புத் தரப்பிற்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணமான Nec உதவியுடன், பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் ஊடகங்களின் தலைவர்களின் தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் தொலைபேசி அழைப்புக்களும் அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளின் தொலைபேசி அழைப்புக்களும் இவ்வாறு ஒட்டுக்கேட்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீமின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியிருந்தார். பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக டெய்லி மிரர் பத்திரிகையும் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் பின்னணியில், விசேட நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.