வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடித்த 81 மீனவர்கள் கைதாகி விடுதலை
by Staff Writer 18-08-2018 | 8:24 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடலட்டை பிடித்த 81 மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு - நாகர் கோயில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்ட 28 படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், 81 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரவில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிராத நிலையில், விதிமுறைகளை மீறி கடலட்டை பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனினும், இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரவில் கடலட்டை பிடிப்பதற்கு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை காண்பித்ததையடுத்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை - கோரியடி கடற்படை முகாமில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு வௌியிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டாரவிடம் வினவியபோது, மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை அறியக்கிடைக்கவில்லை என தெரிவித்தார்.