நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் பலி

நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் பலி

by Bella Dalima 16-08-2018 | 4:10 PM
சூடானில் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 22 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சூடான் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து வடக்கே சுமார் 750 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நைல் நதியில் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது. இயந்திரக் கோளாறு காரணமாக பழுதாகிய குறித்த படகில் 40 மாணவர்கள் இருந்துள்ளனர். படகில் இருந்த 7 முதல் 16 வயதான குழந்தைகள் சிலர் அச்சத்தில் படகின் ஒரு புறமாக ஒதுங்கிய போது, படகு கவிழ்ந்ததாக பாடசாலை அதிபர் கூறியுள்ளார். கென்பா உயர்நிலை பாடசாலையில் பயின்றுவந்த குறித்த சிறுவர்கள் வழமையாக நடந்தே பாடசாலைக்கு சென்றுள்ளனர். எனினும், கடந்த வாரம் பெய்த கனமழைக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவிற்கு பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்கள் படகில் பயணித்து வந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பிள்ளைகள் என அதிபர் தெரிவித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று குடும்பங்களில் தலா 2 குழந்தைகளும், இரண்டு குடும்பங்களில் தலா 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் படகில் இல்லாததால் பலர் உயிரிழக்க நேர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.