by Staff Writer 13-08-2018 | 9:43 AM
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர் இன்று காலை ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.
இந்தப் பிரச்சினையை நிர்வகிக்கும் பொறுப்பு சிறைச்சாலை ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதென நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஐ அதிகாரி தெரிவித்தார்.
இன்று காலை 8 மணியளவில் பெண் கைதிகள் சிலர் சிறைவைக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதியின் கூரையில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 15 பெண் கைதிகள் வரை இணைந்திருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
பெண் கைதிகள் மேற்கொண்டுள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பும் வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக இன்று பகல் கூடியிருந்தது.
இது தொடர்பாக அமைச்சின் அனுமதியின்றி தம்மால் கருத்து தெரிவிக்க முடியாது என சிறைச் சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
சிறைச்சாலையினுள்ளே இடம்பெறும் பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பெண் கைதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.