அர்ஜூன், கசுனின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

by Staff Writer 09-08-2018 | 6:04 PM
Colombo (News 1st)  பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் W.M. மென்டிஸ் நிறுவனம், பேர்ப்பச்சுவல் அசட் மெனேஜ்மன்ட் நிறுவனம், பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் நிறுவனம், பேர்ப்பச்சுவல் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளின் விபரங்களை இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கிக்கு பெற்றுக்கொடுக்குமாறு 13 அரச மற்றும் தனியார் வங்கி நிறுவனங்களுக்கு நீதவான் இன்று உத்தரவிட்டார். முறிகள் ஏலத்தின் போது பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் முறையற்ற விதத்தில் இலாபமீட்டியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அந்த வங்கியின் வங்கிக்கணக்கு அறிக்கையைக் கோரியிருந்தது. குறித்த கோரிக்கை அந்த நிறுவனத்தினால் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி நிறைவேற்றப்படவில்லையென தெரிவித்து சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரசின் சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹகம முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல்களின் பேர்ப்பச்சுவல் ட்​ரஷரீஸ் நிறுவனத்தினால் ஈட்டப்பட்ட, மத்திய வங்கியினால் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு மில்லியனுக்கும் அதிக பணத்தை குறித்த நிறுவனத்திற்கு மீள செலுத்துமாறு உத்தரவிடுமாறு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். குறித்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி எழுத்து மூலம் விடயங்களை முன்வைக்குமாறு சட்ட மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.