கைதிகள் ​கொலை: சந்தேகநபர்களின் பிணை நிராகரிப்பு

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் ​கொலை: சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

by Staff Writer 19-07-2018 | 5:42 PM
Colombo (News 1st)  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்டோர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானக ராஜரத்னவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த 27 கைதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் அடுத்தகட்ட விசாரணைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரசின் சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் மன்றில் தெரிவித்தார். குறித்த கோரிக்கையை ஆராய்ந்த ​மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகநபர்களுக்கு பிணை கோரி முன்வைக்கப்பட்ட மனுவை நிராகரித்தார். மேலும், 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குறித்த குற்றச்செயல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மிக சிக்கலானவை என்பதால், இது தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 2015 இல் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.