சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

சீனாவில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 19 பேர் பலி

by Bella Dalima 13-07-2018 | 4:42 PM
சீனாவில் இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் உணவு மற்றும் மருத்துவ தொழிற்துறைகளுக்கான இரசாயனங்களை தயாரிக்கும் தனியார் இரசாயன ஆலை ஒன்று செயற்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று (12) மாலை 11.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ ஆலையின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியதால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனிடையே, ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு பெண் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.