600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது

அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது

by Bella Dalima 11-07-2018 | 7:49 PM
அவுஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள இராட்சத முதலையை வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் ஓடும் காத்ரீன் ஆற்றில் வாழ்ந்து வந்த இந்த இராட்சத முதலை அண்மையில் பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நகர ஆரம்பித்தது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில், கடந்த 8 வருடங்களாக தேடப்பட்டு வந்த இந்த முதலையை வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் தற்போது உயிருடன் பிடித்துள்ளனர். 5 மீட்டர் நீளமுள்ள இந்த ஆண் முதலை 600 கிலோ எடை கொண்டது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் குறித்த முதலையை முதலைகள் பண்ணையில் விட்டுள்ளனர். இதற்கு முன்னர் 1974 ஆம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண் முதலை பிடிக்கப்பட்டது. 6.4 மீட்டர் நீளமான அந்த முதலை கொல்லப்பட்டது.