பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

by Bella Dalima 26-06-2018 | 4:11 PM
பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்துகொள்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் ட்விட்டரில் ‘Me Too’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது. ஹொலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வே வின்ஸ்டீன் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானதையடுத்து, ஹொலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார். ‘Me Too’என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பிரபலங்கள் தங்கள் அனுபவங்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பதிவு செய்தனர். இந்த பிரசாரம் வைரலாக பரவிய நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுநர்கள் கொண்ட குழு கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாமிடத்தில் உள்ளன. சோமாலியா, சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதற்கும், பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை சமாளிப்பதற்கும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதையே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.