by Bella Dalima 20-06-2018 | 7:13 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார கொடுப்பனவுப் பட்டியல் சீரான முறையில் விநியோகிக்கப்படுவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மின் பாவனையாளர்களுக்கான மின்சார கொடுப்பனவு பட்டியல் மாதாந்தம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலானா பகுதிகளில் இந்த பட்டியல் மாதாந்தம் விநியோகிக்கப்படுவதில்லை என மக்கள் குறிப்பிட்டனர்.
மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்கள், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, உயிலங்குளம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இந்த நிலை காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.
பல மாதங்கள் கடந்து இவ்வாறு மின்சார கொடுப்பனவுப் பட்டியல் வழங்கப்படுவதால், கட்டணங்களை செலுத்துவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த நான்கு வருடங்களாக கட்டணப்பட்டியல் வழங்கப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டனர்.
பெப்ரவரி மாதம் முதல் மாதாந்தம் கட்டணப்பட்டியல் வழங்கப்பட்டு வருவதாகவும், மின்சார கட்டணப்பட்டியல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை காணப்பட்டால் 021 228 37 87 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறும் கிளிநொச்சி பிரதேச மின்பொறியியலாளர் அலுவலக அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.