சந்திமாலுக்கு எதிராக கிளம்பிய ஐ.சீ.சி

சந்திமாலுக்கு எதிராக கிளம்பிய ஐ.சீ.சி

by Staff Writer 17-06-2018 | 10:24 PM
பந்தின் தன்மையை மாற்றியதாக இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. இலங்கை அணி வீரர்களின் நன்மதிப்பை பாதுகாப்பதற்கு முன்னிற்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க விதிக் கோவையின் இரண்டாம் சரத்தில் இரண்டு ஒன்பது பிரிவை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் செய்ததாக கூறப்படும் தவறை உறுதிபடுத்துவதற்கான காணொளி ஆதாரங்களை இதுவரையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிடவில்லை. டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும் களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களும் பந்தின் பிரகாசத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த முயற்சி குற்றமாக கருதப்படுவதில்லை. மேற்கிந்தியதீவுகளின் டெரன் சமி மைதானத்தில் நடைபெறும் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளில் இலங்கை வீரர்கள் மைதானத்திற்கு வர மறுப்பு தெரிவித்தனர். இரண்டாம் நாளில் இலங்கை வீரர்கள் பந்தின் தன்மையை மாற்றியமைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்தே இலங்கை வீரர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி வீரரான தனஞ்சய டி சில்வா பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதோடு , நடுவர்கள் பந்தை பரிசோதித்தனர். இந்த காட்சி மைதானத்தின் அகலத்திரையில் காண்பிக்கப்பட்டதோடு அதன்பின்னர் நடுவர்கள் புதிய பந்தொன்றை விளையாடுவதற்காக வழங்கினர். இதற்கு இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு , வீரர்கள் ஓய்வறையில் இருந்தனர். இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க , இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க மற்றும் போட்டி மத்தியஸ்தரான ஜவகால் ஶ்ரீநாத் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நேற்றைய ஆட்டம் 02 மணித்தியாலங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டதோடு , நடுவர்களினால் மேற்கிந்தியதீவுகளுக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டன. முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்றிருந்தது. நேற்றைய மூன்றாம் நாளில் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றிருந்தது. எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்தும் நடத்துவதற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது கிரிக்கெட்டின் மகத்துவத்தை கருத்திற் கொண்டு நன்மதிப்புடன் செயற்படுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நடைபெறும் சந்தர்ப்பத்தில் நேர்முக வர்ணனையில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்ககாரவும் இது தொடர்பில் கருத்து வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.