தோட்டத்தொழிலாளர்களிடம் எஞ்சியுள்ள கேள்விகள்

தேயிலை விலையேற்றமும் தோட்டத்தொழிலாளர்களிடம் எஞ்சியுள்ள கேள்விகளும்

by Bella Dalima 09-06-2018 | 9:34 PM
Colombo (News 1st) இறுதியாகக் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முடிவடையவுள்ளது. எனினும், கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 730 ரூபா நாளாந்த வருமானத்தை எத்தனை தொழிலாளர்கள் பெற்றனர் என்பது இன்றும் கேள்விக்குறியே. இறுதியாகக் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய, தோட்டத் தொழிலாளியொருவரின் நாளாந்த வருமானம் 730 ரூபாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டியுள்ளது.
  • கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் மாதாந்த வருமான பற்றுச்சீட்டை ஒருமுறையேனும் பார்த்ததுண்டா?
  • அவ்வாறாயின், அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் நீங்கள் முன்வைக்கவுள்ள நிபந்தனைகள் என்ன?
  • இன்றைய வாழ்க்கைச் செலவுகளுக்கு இந்த சொற்ப வருவாய் போதுமானதா?
  • கடந்த முறை ஏமாற்றிய நிலுவைச் சம்பளத்தை எவ்வாறு, எப்போது பெற்றுக்கொடுக்கப்போகிறீர்கள்?
  • கடந்த முறையைப் போன்று, பேச்சுவார்த்தையென இழுத்தடிக்காது, உரிய காலத்தில் உழைப்பிற்கேற்ப ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்க நீங்கள் தயாரா?
இவையே தோட்டத்தொழிலாளர்களிடம் தற்போதுள்ள கேள்விகள். உலகலாவிய ரீதியில் தேயிலை விலையின் வீழ்ச்சியே சம்பளத்தை அதிகரிக்க முடியாமைக்குக் காரணம் என கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 2017 இல் பச்சைத் தேயிலைக்கு சிறு உரிமையாளர்களினால் பெறப்பட்ட சராசரி விலை 2016-ஐ விட அதிகம் என மத்திய வங்கி கூறுகின்றது. 2016-இல் காணப்பட்ட 1 கிலோ கிராமிற்கான விலை 68.53 இலிருந்து 2017-இல் 90.69 ஆக அதிகரித்ததாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. தேயிலை உற்பத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக 2017-இல் சாதகமான வளர்ச்சியொன்றைப் பதிவு செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேயிலை விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு உள்நாட்டுத் தேயிலை உற்பத்தியாளர்கள், 2018 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பார்கள் என்பதனை எதிர்பார்க்கச் செய்வதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.