இரண்டாவது நாளாக நிவாரண யாத்திரை

இரண்டாவது நாளாக நிவாரண யாத்திரை: புத்தளம், இரத்தினபுரி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு 

by Bella Dalima 25-05-2018 | 7:48 PM
Colombo (News 1st)  சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதநேயமிக்கவர்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களுடன் சக்தி சிரச நிவாரண யாத்திரை இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் இன்று புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றன. சக்தி சிரச நிவாரண யாத்திரையின் வாகனங்கள் புறப்படுவதற்கு முன்னர் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் வழிபாடுகள் இடம்பெற்றன. கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் இலத்திரனியல் ஊடகத்தின் குழுமப் பணிப்பாளர் நீட்ரா வீரசிங்க உள்ளிட்ட சிலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் காலை 7 மணியளவில் சீரற்ற வானிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். பலத்த மழைக்கு மத்தியில் புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய, மஹவெவ பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடி நிவாரணங்களுடன் ஒரு குழுவினர் சென்றனர். நிவாரணங்களுடன் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் வருகை தருவதை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், தும்மோதர கிராமத்தில் ஒன்று கூடி இருந்தனர். அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதேவேளை, சீரற்ற வானிலையால் அதிகளவில் பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ள புத்தளம் மாவட்டத்தின் மஹவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு சக்தி சிரச நிவாரணக் குழுவொன்று நிவாரணங்களை வழங்கியது. மூன்று நாட்களாக மக்கள் வழங்கிய நிவாரணங்களுடன் மற்றுமொரு குழுவினர் இரத்தினபுரி மாவட்டத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச்சென்றனர். கடினமான பாதையின் ஊடாக இரத்தினபுரி நகருக்கு அருகிலுள்ள தம்பலுவன கிராமத்தை நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்றடைந்தனர். இரத்தினபுரி பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக நியூஸ்ஃபெஸ்ட்டுடன் இணைந்துகொண்டனர். சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்காக கொழும்பு-2 , பிரேப்ரூக் பிளேஸிலுள்ள MTV/MBC தலைமையகத்திற்கு இன்றைய தினமும் அதிகளவிலானோர் பொருட்களைக் கொண்டு வந்து வழங்கினர்.