முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் எடியூரப்பா

by Bella Dalima 19-05-2018 | 5:15 PM
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முன்பாக தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் எடியூரப்பா. கர்நாடக சட்டப்பேரவையில் போதிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். கடந்த 17 ஆம் திகதி காலை கர்நாடக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடியூரப்பா, சுமார் 56 மணி நேரத்தில் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் இராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் பேரவையில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் தனது இராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா, நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார். நேற்று முன்தினம், தலைமைச் செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் - மஜத உறுப்பினர்கள் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.