கைதிகளுக்கு அநீதி: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by Bella Dalima 11-05-2018 | 7:25 PM
Colombo (News 1st)  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட இ​ணைப்பாளர் இன்று வவுனியா சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைக்காவலர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளைக் கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது. அதனையடுத்து, வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு இழைக்கப்படுவதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பில், சிறைச்சாலைகள் ஊடகப் ​பேச்சாளர் துஷார உப்புல்தெனியவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. சக கைதிகளே தம்மிடம் பணம் கோருவதாக கைதிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் அல்ல எனவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார். முறைப்பாடு முன்வைத்த கைதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், வவுனியா சிறைச்சாலைக்குள் பணம் அறிவிடும் செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் ​பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார்.