லெஸ்டர் ஜேம்ஸின்  விருதை கண்டுபிடிக்க நடவடிக்கை

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருதை கண்டுபிடிக்க பொது மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள பொலிஸார்

by Staff Writer 03-05-2018 | 11:49 AM
COLOMBO (News 1st) லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளின் போது திருடப்பட்ட, பிரபல இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு சொந்தமான சர்வதேச விருதை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர். இந்தியாவில் வழங்கப்பட்ட குறித்த வௌ்ளி விருதை திருடியவர்களை இதுவரை கைது செய்ய முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விருது அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது அன்னாரின் பூதவுடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த போதே திருடப்பட்டுள்ளது. இந்த வாழ்நாள் விருது 2000 ஆம் ஆண்டு காலஞ்சென்ற இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் 31 ஆவது சர்வதேச இந்திய சினிமா விருது வழங்கும் விழாவின் போது வழங்கப்பட்டிருந்தது. விலைமதிப்பற்ற இந்த விருது இலங்கையர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்த ஒன்றாகும். இலங்கையின் நற்பெயரை சர்வதேசத்தில் ஔிரச் செய்வதற்கு இந்த விருதும் காரணமாக அமைந்திருந்தது. இந்த விருதை திருடியவர்கள் தொடர்பிலான தகவல் அறிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்தின்

0112 421111

என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.