நாளை வெப்பமான வானிலை நிலவும் சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் நாளை வெப்பமான வானிலை நிலவும் சாத்தியம்

by Bella Dalima 02-05-2018 | 7:53 PM
Colombo (News 1st)  நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் (03) வெப்பமான வானிலை நிலவும் சாத்தியமுள்ளதால் விழிப்புடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு, வட மேல், ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பொலன்னறுவை மாவட்ட மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பொலன்னறுவை மாவட்டத்திலேயே அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் 37.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பமான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் அதிகமாக நீர் பருகுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், நோயாளர்கள், முதியோர்கள் தொடர்பில் இந்த காலப்பகுதியில் அவதானமாக செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், சில பகுதிகளில் நாளை மறுதினம் (04) முதல் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.