நான் வெற்றி பெறவே எதிர்பார்க்கிறேன்

நான் வெற்றி பெறவே எதிர்பார்க்கிறேன்: மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்

by Bella Dalima 28-04-2018 | 9:19 PM
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ​நேற்று (27) நடைபெற்ற கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது தொடர்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி: இலங்கை போன்றதொரு சிறிய நாட்டில் நீங்கள் ஜனாதிபதியாக இருந்தீர்கள். பிராந்திய அரசியல் அதிகாரம் உங்களுடைய அரசாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கும். இதற்கு நீங்கள் எவ்வாறு முகங்கொடுத்தீர்கள்? மொஹமட் நஷீட்: நான் ஜனாதிபதியாகியது வரலாற்றில் எதிர்பாராத விடயமென நான் நினைக்கின்றேன். எனினும், உங்களுடைய கேள்விக்கான பதில் உண்மையில் அனைத்து நாடுகளிலும் எழக்கூடியது. முதற்கட்டமாக மாற்றத்தை ஏற்படுத்தி ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றி, அதற்காக ஆதரவளித்தவர்களுக்கும் அதிகாரத்தை வழங்கி, நாட்டைத் தமது தேவைக்கமைய மாற்றிக்கொள்வார்கள். அப்போது விலைமனுவற்ற கொடுக்கல் வாங்கல், சடுதியான விலை அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளினூடாக பொருளாதார அதிகாரத்தையும் கைப்பற்றிக்கொள்வர். அதனூடாக கடனை அடைப்பதற்கு முயற்சிப்பார்கள். எனினும், கடன் சுமை அதிகரித்து அது கழுத்தை நெறிக்கும். அப்போது நாட்டின் சொத்துக்களை இனாமாகப் பெற்றுக்கொடுக்க நேரிடும். இது தான் மாலைத்தீவில் தற்போது நடைபெறுகின்றது. நான் தற்போது சொல்வது சீனாவின் செயற்பாடுகள் தொடர்பிலேயே. கேள்வி: ஜனாதிபதி நஷீட் அவர்களே, மீண்டும் அதிகாரத்திற்கு வருவது தொடர்பில் ஏதேனும் எண்ணமுள்ளதா ? மொஹமட் நஷீட்: ஆம்! எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும், வழமைபோன்று என்னால் போட்டியிட முடியாது. இருப்பினும், இறுதித் தருணத்தில் கூட அது மாற்றமடையக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் நான் நிச்சயமாக போட்டியிட்டு வெற்றிபெறுவேன். நான் வெற்றி பெறவே எதிர்பார்க்கின்றேன்.